ஞாயிறு, 17 நவம்பர், 2013

தலபுராணங்களில் நால்வர் ஸ்துதி - சுந்தரமூர்த்தி நாயனார்


1. மனைப்பாசம் அகற்றவென்று வந்துவழக் குரைத்தாண்ட வரதர் தம்மைத்
தினைப்போதிற் பரவையிடத் தெனைக் கூட்டும் எனத்துாது செலுத்தி வாழ்ந்து
வினைப்போகம் கடந்ததவ முனிவரெதிர் கொளக்கரிமேல் வெள்ளிவெற்பில்
பனைத்தாரோன் உடன்போன பாவலன்பொன் அடிக்கமலம் பரவுவாமே

-துறைசைப் புராணம்


2. மன்றுடையான் ஆண்டவனுங் கொண்டவனுந் தந்தையுமா மாண்பு முற்றுந்
தொன்றுடைய தோழமையில் வைத்துணர்ந்து வேண்டுவன சொல்லிப் பெற்றே
நன்றுடையான் எளிமையையும் அவனடிமைப் பெருமையையும் நயக்கப் பாடும்
வன்றொண்டன் பெருமையினை வாயார வாழ்த்தாதார் வாழாதாரே

-திருநாகேச்சுரப் புராணம்

3. அடிமை யானவர்க் கருளையுந் தன்னையும் உயிரிற்
படியிலா வகை யளிப்பது பாருளோர் அறிய
வடிவின் மாண்டவள் ஒருத்திதுா தெனவிறை வழங்க
நொடியின் மாலைசெய் வன்றொண்டர் அடிமலர் நுவல்வாம்

-திருவானைக்காப் புராணம்

4.ஏனமாய் மாயோன் வேலை யிருநிலங் கீண்டுங் காணாத்
தேனவிழ் கமல மன்ன சேவடி படியிற் தோய
நானவார் குழலி பங்கின் நாதனைத் துாது  விட்ட
வானுலாம் பொழில்சூழ் நாவன் மன்னனை வணங்கல் செய்வாம்

-சங்கர நாராயண சுவாமி கோயிற் புராணம்

5. ஆடு பாம்பணிந் தம்பலத் தாடிய வடிகள்
பாடு பாப்பல பகர்ந்துமற் றிம்மையிற் பயனும்
கூடு மேலையிற் பயனுங்கோ தனத்தையும் ஒருவும்
வீடும் வாங்கும்வா ணிகத்துறு விரகனை வியப்பாம்

-பேரூர்ப் புராணம்

6. வறந்திடு பொய்கை முன்னிரம்ப மற்றவண்
உறைந்திடு முதலை  வந்துதிப்ப வன்னதால்
இறந்திடு மகன் வளர்ந்தெய்தப் பாடலொன்
றறைந்திடு சுந்தரன் அடிகள் போற்றுவாம்

-கந்தபுராணம்

7. தாதுகொண்ட மலர்ச் சுரியற் பரவை என்பாள்
         தனத்துணைமேல் மயற் குளிரின் தளர்வு தீர
ஏதுகொண்டு விழையுநெறி விரும்பி மாலும்
         விரிஞ்சனு முன்தொடராத வெளியையாரும்
யாதுகொண்டும் அறிவரிதாய் எங்குமான
        இரும்பொருளை நெருங்குமிருள் இரவின் மீளத்
துாதுகொண்டார் தமைஎமையாட் கொள்வீரென்று
        சொல்லி அவர் பதம் புல்லித் தொழுதல் செய்வாம்

-சேதுபுராணம்

8. தாதுநிறைக்கும் பசுந்துளபத் தாமத்தோனும் சரோருகச்செம்
போதின் அகத்துச் சகமீன்ற புத்தேள் தானும் அறியானை
மாதினிடத்தின் முனிவொழிய ஆரூர்ச் செம்பொன் மணிமறுகில்
துாது நடத்துங் கவிராசன் துணைத்தாட் கமலந் தொழுதிடுவாம்

-பிரேமாத்தர  காண்டம்

9.அரவக லல்குலார்பால் ஆசைநீத் தவர்க்கே வீடு
தருவமென் றளவில் வேதஞ் சாற்றிய தலைவன் தன்னைப்
பரவைதன் புலவி தீர்ப்பான் கழுதுகண் படுக்கும் பானாள்
இரவினிற் துாது கொண்டோன் இணையடி முடிமேல் வைப்பாம்

-திருவிளையாடற் புராணம்

10. பிழைப்பித்தே கூற்றான் முதலைவாய்ப் பிள்ளை
அழைப்பித்தார் பாதநினைப் பாம்

-சைவ சமய நெறி

11. கதழ் எரிநேமி துாண்டிக் கராங்கவர் குரவனீன்ற
மதலையை அழைத்த செங்கண் மாலென வருந்துறாமல்
அதிர்கடலமிர்தம் அன்ன அருந்தமிழ்ப் பதிகம் பாடி
முதலைவாய்ப் பிள்ளை தந்த முதல்வனை வழுத்தல் செய்வாம்

-காசி கண்டம்

12. சுந்தர வநிதை என்றே துதிபெறும் பரவை யார்தம்
சிந்தையினுாடல் தீர்ப்பான் செறிந்திடும் இரவின் நாப்பண்
இந்துவாழ் சடையா னைத்துாது ஏகென ஏவல் கொண்ட
செந்தமிழ் நாவலுாரர் சேவடி சிரமேற் கொள்வாம்

-திருவாடானைப் புராணம்

13. யாவரு மறையி னந்தத் ..... வேட்க
மூவரும் புகழ நின்ற முழுமுதல் ஒருவர் நல்கு
தாவரும் பொருளும் வெளவித் தான்கொடுத் துவக்கப்பெற்ற
தேவரும் பரவும் நாவற் செம்மலைச் சேர்ந்து வாழ்வாம்

-திருத்துருத்திப்புராணம்

14. வந்தா னாவலுார் வலிதகப் படுத்
திந்திரப் பரவையை விலக்கி யின்ப மார்ந்
தந்திவோர் சங்கிலி அணைத் திறுக்கிய
சுந்தரக் களிற்றினைத் தொழுது போற்றுவாம்

- திருவையாற்றுப் புராணம்

15. புவியாசைக் கழைகளிற்று தலைவரா வணக்கூடம் புகுந்து பொற்பூண்
தவிராத கொம்பிரண்டு  மேவியொரு வல்லிதொடர் தளையை நீவிக்
குவியாரம் புனைபரவை கொங்கையா னையின்பொருட்டுக் குழைதோய் சங்கச்
செவியானைத் துாதுவிட்ட கவியானை தனைத்தினமுஞ்  சிந்தை செய்வாம்

-திருக்குற்றாலத் தலபுராணம்

16. அரவக் கடலி னிடைப்பாம்பி னமளி படுத்த துழாய் முகிலும்
விரைக் கொப்புளிக்குஞ் செழுங்கமல வீட்டுக்கிறையும் இனுங்காணா
இருபொற்சரணஞ் சிவப்பூர விரவிற் பரவைக் கிருந்  துாது
பரவப் பணித்த கவிராசன் பாதமெமது தலைக் கொள்வாம்

-திருச்செந்துார் தலபுராணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate