சனி, 27 ஏப்ரல், 2013

சிற்றிலக்கியங்களில் சிவஞான முனிவர் அமைக்கும் தத்துவக் கொள்கை - ச.ரத்நவேலன் (பகுதி - 7)


3.  இருள்

இருளாவது ஆணவமலம். இவ்வாணவமலத்தை உமாபதி சிவாச்சாரிய சுவாமிகள் இருளென்றே திருவருட்பயனில் ஆள்கிறார்கள். இருள் எல்லாப் பொருள்களும் தம் வித்தியாசங்கள் தோன்றாமல் ஒரே பொருள் போலிருக்கும்படி மறைத்து நிற்கும்.
அவ்வாணவம் உயிரை அநாதியே பந்தித்து அவ்விருள் போலத் தன்னையும் உயிரையும் பதிப்பொருளையும் மறைத்து நிற்கும். இருளாவது தன்னைக் காட்டும். ஆணவம், தன்னையும் காட்டாது. ஆன்மாவுக்கு அஞ்ஞானம் (அறியாமை) ஆணவமலத்தாலேயே வந்தது. ஆணவம் உயிர்க்கு இயல்பன்று. இயல்பாயின் முத்திக் காலத்தும் உடன் வந்து வருத்தும்ஞூ. சிவஞானம் உயிரின் இயல்பான ஆணவத்தை அழிக்கும் என்று கூறினால் இயல்பான குணம் அழியுமாயின் அக்குணமுடைய குணியாகிய உயிரும் அழிதல் வேண்டும். ஆகையால் ஆணவத்துன்பம் உயிர்க்கு இயல்பன்று. அப்பந்தம் அநாதியாயினும் வீட்டு நீங்கும் தன்மையுடையது. செம்பைப் பொருந்திய களிம்பு போல்வது ஆணவம்.

மாதவச் சிவஞான யோகிகள் ஆணவமலம் பற்றி,

"செம்புறு களிம்பென வநாதிமல மூழ்கியிருள்
சேருமலர் விழியென் னவே
தெளிவற்ற கேவலத் தசைவற் றிருந்து            (செப் - 4)

"முன்னைமல மென்னுமொரு பேய் பிடித்து'   (செப் - 5)

"என்னையு முனையுங் காட்டா தென்னுளேயன்று தொட்டுத்
துன்னிய மலவீரத் தின் பொருட்டு'                    (கலைசை- 60)

சாறுவ  தீர்த்தவொப்  பின்பெயர்
நீங்கிடச் சார்மனமே                         (கம்பரந் - 27)

உ.வ. தீர்த்த ஒப்பின் பெயர் நீங்கிடச் சார்மனமே  உகர வகரங்களாகிய இரண்டு எழுத்துக்களை நீக்கிய உவமை என்னும் மையாகிய ஆணவமலம் கெடச் சார்ந்து வாசிப்பாயாக மனமே என்பதில் இருள் என்னும் பொருள் தரும் மை என்று ஆணவ மலத்தை இட்டு வழங்கினமை காண்க.

"இருள் கார்க்கு'  ஆணவமலமாகிய அந்தகாரத்தை (கம்பரந்தாதி - 43) என இவ்வாறு பலவிடங்களில் கூறுகிறார்கள்.

4. கருமம்

கணக்கில் அடங்காத உயிர்கள் அழிவற்றன. அவை, அறியாமையைச் செய்கின்ற ஆணவ மலத்தில் அழுத்துவாரின்றி அநாதியே அழுந்திக் கிடக்கின்றன. அவ்வாணவமலப் பிடிப்பு நெகிழ்ச்சியடைதல் வேண்டும். நெகிழ்ச்சியடைய உதவுவது கன்மமாகும்.

பிறந்த குழந்தைக்குப் பால் தேவை ஆயினும் அக்குழவி அறிந்து கேளாது. குருடனுக்குக் கோல்  தேவை. கொடுப்பின் ஏற்றுக் கொண்டு நடப்பான். அதுபோல ஆணவ மலப்பிடிப்பிலிருந்த உயிர்க்குக் கன்மத்தையும் அது கொண்டு மாயா காரிய தநுக்களையும் சிவன் அறிந்து உதவுவான். உதவி, போக்குவரவு புரியப் பண்ணி, மும்மலப்பற்று விட்டுத் தன்னையறிந்து உயிர் ஆனந்த வெள்ளத்தில் அழுந்தப் பண்ணுவான். இதனை

"செம்புறு களிம்பென வநாதிமல மூழ்கியிருள்
சேருமலர் விழியென் னவே
தெளிவற்ற கேவலத் தசைவற் றிருந்துமல
சேட்டையற்ற குழவி குருடர்
தம்பிணியி னாலுற்ற பால்கோலை நோக்கவவை
தமையளிப் பாரென் னநான்
சார்கன்ம மாயையை விரும்பநீ தந்திடச்
சகலனாய்ச் சுழல்க றங்கு
பம்பரம தென்னநீள் பிறவிச் சுழிக்குளே
பட்டுழல்பெரும்  பாவியேன்
பாழான மலமற்று வினையற்று மாயையின்
பற்றுவிட் டெனைய றிந்துன்
அம்பொனடி நீழல்சேர்ந் தானந்த முண்டுநா
னதுவா யிருப்ப தென்றோ                  (செப்ப - 4)

என்று ஸ்ரீமத் சிவஞான சுவாமிகள் அமைப்பது காண்க. ஆணவப் பிடிப்பிலிருந்த உயிர், சார்கன்ம மாயையை விரும்பியது; அதனாலேயே இறைவனால் பிறவி கொடுக்கப்பட்டு அச்சுழிக்குள் அகப்பட்டுக் கறங்கு, பம்பரங்கள் போலச் சுழன்றது. அதனாலேயே பாழான மலமற்று, கன்மமாயை விருப்பங்களும் நீங்கின. எனவே கன்மஞ் சாரும் விருப்பம் என்னும் மூலகன்மம் முன்னரே உண்டு என உய்த்துணர வைத்த சுவாமிகளின் அருமைப்பாடு கொண்டாடத் தக்கது.

அக்கன்மம் சஞ்சிதம், பிராரத்தம், ஆகாமியம் என மூவகைப் பட்டுப் பலபிறவிக்கு வித்தாகும் என்பதனை,

"பண்டைவினை யாலும்வரு பழவினையி னாலுமுறு
பாழ்த்தகன் மத்தி னாலும்
பாழான மாயைப் புணர்ச்சியா லுந்தொலைவில்
பலபல தநுக்க டூக்கிக்
கொண்டு சுழல் பாவியேன்                                   (செப். பதி - 1)

என்று உரைத்த மாட்சியில் அறியதாம். பண்டை வினை  சஞ்சிதம்; பழவினை  பிராரத்தம்; உறுபாழ்த்த கன்மம்  ஆகாமியம்.

"தொல்லைவினைத் தொடக்குண்டு சுடுநெருப்பி னரவேய்ப்ப
அல்லலுறும் புலையேனை'                                    (கலை - 17)

என்று கூறுவது கொண்டு வினை என்னும் கன்மமலம் அநாதியானது என்பது புலப்படுகிறது. சித்தாந்த சைவம் கன்மமலம் பிரவாகவநாதி என்று கூறும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate