புதன், 24 ஏப்ரல், 2013

சிற்றிலக்கியங்களில் சிவஞான முனிவர் அமைக்கும் தத்துவக் கொள்கை - ச.ரத்நவேலன் (பகுதி - 5)

1. இ. தடத்த நிலை

தடத்தம் என்பது பக்கத்தில் உள்ளதில் இருப்பது என்னும் பொருளை உணர்த்தும். "ஒரு பொருளை அறிவிக்க விரும்புவோர் அப்பொருளை நேரே சுட்டாமல், அதற்கடுத்து உள்ளதொரு பொருளைச் சுட்டிக்காட்டி, குறித்த பொருளைப் பொதுவாக உணர வைப்பது தடத்தலக்கணம் எனப்படும்' எனச் சிவஞானபாடியத் திறவு (பக்.8) என்னும் நூல் தடத்தலக்கணம் பற்றிக் கூறுவது காண்க.



எம்பிரானது சொரூபநிலைக் கடுத்துள்ள திருமேனிகளே அவனது தடத்த நிலையாம். உயிர்களின் பொருட்டு முதல்வனாகிய சிவன் ஐந்தொழில் செய்ய வேண்டியுள்ளது. அப்பொழுது அவன் மேற்கொள்ளும் திருமேனிகள் அவன் தடத்த இலக்கணத்தைத் தெரியப்படுத்துகின்றன. இதனை,

"அருமேனிகொண்டு முருமேனி கொண்டு மருள்கூரிரண்டு மருவுந்
திருமேனி கொண்டு மலநோய் துரந்து சிறியேங்களுய்யு முறையால்'
(குளத். அந். 22)

என்பதால் காண்க. சிவம் தன் சக்திகளைத் தோற்றி அவற்றை நிலைக்களமாகக் கொண்டு இயக்குகிறான். அப்பொழுது இவ்வுலகத்தைத் தோற்றுவித்தும், காப்பாற்றியும், ஒரு கால எல்லையில் ஒடுக்கியும் உயிர்களுக்கு உபகரிக்கிறான். உலகைத் தோற்றுவிக்கும் நிலையில் உருவத் திருமேனி கொள்கிறான். ஒடுக்கி நிற்கும் நிலையில் அருவத் திருமேனி கொள்கிறான். காத்தும் போகத்தைத் துய்ப்பிக்கும் நிலையிலும் போகத் திருமேனி, அதிகாரத் திருமேனிகளைப் பெறுகிறான். இவையெல்லாம் உயிரின் மலநோய் நீக்குதற்பொருட்டேயாம் என மேலுள்ள அடிகளில் முனிவரர் பெருமான் கூறிய அருமை காண்க.

சிலர் இறைவன் திருவுருவங் கொள்ளமுடியுமோ என்பர். அவன் தேசங்காலங் கடந்தவன்; ஞானமயன்; அறிதற்கரியவன்; வேண்டுதல் வேண்டாமையிலான்; உயிர்க்குயிராவன் என்னும் இவ்வாறு இலக்கணங்களாலும் சிவன் தானே தன் திருவுள்ளப்படி திருவுருக் கொள்ள முடியும்' என்று  தெரிந்து கொள்க. 13

அவனது உருவத் திருமேனி சுத்த தத்துவத்தின் கண் நான்காம். அவை மகேசன், உருத்திரன், மால், அயன் என்பன. அப்பிரான் அத்திருமேனிகள்  கொண்டு அனந்தர், ஸ்ரீகண்டருத்திரர் போன்ற நிரஞ்சனராகிய (மலம் நீங்கிய) ஆன்மாக்களை ஏவியும்அத்தொழில்களாற்றுவான். யோகத்தாலும், தவத்தாலும், ஞானத்தாலும் சிறந்த மலமுடைய பசுக்களிடம் தனது அதிகாரத்தை வைத்துத் தொழிலாற்றுவதும் அவனது பெருங்கருணையாம். அவ்வாறு மலமுடைய பக்குவான்மாக்களே பிரம விஷ்ணுக்களாம். இப்பிரம விஷ்ணுக்கள் முன்னர்க் கூறப்பட்ட சுத்த தத்துவவாசிகளல்லர். பிரகிருதி தத்துவங்களுக்குட்பட்ட மும்மலமுடையார். இனி மிச்சிர தத்துவங்களில் ஒன்றாகிய அராக தத்துவத்தின் கண் குணிருத்திரர்கள் உளர். இப்பிரம்ம, விஷ்ணு, ருத்திரர்கள் மூவரினும் மேம்பட்ட தத்துவங்கடந்த தெய்வமே சிவபிரான். இதனை ஸ்ரீமத் சுவாமிகள் தாம் அருளிய சிற்றிலக்கியங்களில் காட்டத் தவறவில்லை.

"ஆவகை யன்பரை யாள்கலை சைக்கோன்
மூவரு மேவல்செய் முன்னவ னென்பர்' (கலைசை  43)

"முக்கு ணங்களின் மூவரைத் தோற்றி
மூவ ருக்குமுத்  தொழில்வகுத் தருளி
அக்கு ணங்களுக் கதீதமாய் நிறைவா
யத்து வாக்களைக் கடந்துமே லுலகில்
தக்க நற்கண நாதரேத் தெடுப்பச்
சத்தி  யம்பிகை யுடனரு ளுருவாய்த்
தொக்க கோடிசூ ரியருத யம்போற்
றோன்றி நின்றனை கலைசைவிண் ணவனே' (கலைசை  34)

என்ற  திருவிருத்தங்களில் பிரமன், விஷ்ணு, ருத்திரர்களாகிய குணமூர்த்திகளை ஏவிப் பணி கொண்டு அம்மூவரினும் மேலாய் அம்பிகையுடன் அருள் உருக்கொள்பவன் சிவபிரான் என்று போற்றப்பட்டமை காண்க.

"பிரபுவும், முக்கண்ணரும், நீலகண்டரும், பிரசாந்தருமாகிய உமாசகாய சிவபெருமானை முனியானவன் தியானித்துப் பூதகாரணரும் சமஸ்த சாக்ஷியுமாயினாரை இருளுக்கு மேற்போய் அடைகின்றான்; அவர் பிரமா; அவர் உருத்திரர்; அவர் இந்திரர்; அவர் அக்ஷரர், அவர் பரம சுவராட்டு; அவரே விஷ்ணு; அவர் பிராணன்; அவர் காலர்; அக்கினி, சந்திரன்' என்ற கைவல்லியோபநிடதப் பகுதியைக் காட்டி "ஈண்டு அவர் பிரமா, அவர் விஷ்ணு, அவர் உருத்திரர் என்றமையால் அவர் மூவர்க்கும் துரியராதல் பெறப்பட்டது' எனத் தேவாரம் வேதசாரம் என்ற நூலுடையார் கூறுகிறார். 14

"மூன்று  கடவுளா வாராம்  அந்த
மூன்று கடவுளர் காணவொண் ணாராம்' (திருவே. ஆ.களிப்பு  3)

"மாய னாயினை மறையவ னானாய்
மன்னு யிர்த்தொகை யனைத்தையு மொடுக்கும்
பாயு மால்விடை யுருத்திர னானாய்
பன்னு மூவர்க்கு மூலமாய் நின்றாய்' (கலைசை  31)

என்று மேல் உபநிடதப் பொருளை, மாதவச் சிவஞான யோகிகள் தெளிவு தோன்றக் கூறுவது கண்டின்புறத் தக்கது.

"தேவராயு மசுரராயுஞ் சித்தர் செழுமறைசேர்
நாவராயு நண்ணுபாரும் விண்ணெரிகானீரு
மேவராய விரைமலரோன் செங்கண் மாலீசனென்னு
மூவராய முதலொருவன் மேயது முதுகுன்றே'

என ஆளுடைய  பிள்ளையார் அருளிய தமிழ்வேதமும் இவ்வுண்மையைத் தெளியக் காட்டும்.


குறிப்புகள்

13. சிவப்பிரகாசம், 15
14. தேவாரம் வேதசாரம், ப.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate