திங்கள், 25 ஜூன், 2012

மயிலாப்பூரில் பங்குனி பெருவிழா நடப்பது ஏன்?


(இந்தக் கட்டுரை தொடங்கி சில கட்டுரைகள் தினமலரில் வெளியானவை. மயிலையில் பங்குனிப் பெருவிழா துவங்கி நடந்த போது எழுதியவை. அப்போது பல அரிய தகவல்கள் கிடைத்தன. அவற்றை பிறிதொரு சமயம் தொகுத்து இங்கே வெளியிடுகிறேன்.)


ஒரு வாரமாகவே மயிலாப்பூர் களைகட்டத் துவங்கி விட்டது. கிடைத்த இடங்களில் எல்லாம் சிறு சிறு கடைகள் முளைத்து விட்டன. கோவிலின் முன் பெரிய அளவில் பந்தல் போட்டாகிவிட்டது. தேர் நிலை திறக்கப்பட்டு விட்டது.

வீதிகளில் சுவாமியை நின்று தரிசிப்பதற்காக பந்தல்கள் தயாராகி விட்டன. ஆம்...சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் அனைத்து விதத்திலும் ஈர்க்கும் பங்குனிப் பெருவிழா வந்தே விட்டது.



சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் மயிலாப்பூர் புகழ் பெற்றது இரண்டு காரணங்களால். ஒன்று கபாலீசுவரர், கற்பகாம்பிகை திருக்கோவில். மற்றொன்று இக்கோவிலில் நடக்கும் அறுபத்துமூவர் விழா.

இவ்விழா, பங்குனிப் பெருவிழாவில் 8ம் நாளில் இடம் பெறுகிறது. சென்னை சுற்றுவட்டாரத்தில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் ஆண்டுதோறும் கூடுவது மயிலை பங்குனிப் பெருவிழாவில் தான்.

அறுபத்துமூவர் விழாவின் வரலாற்றுப் பின்னணி குறித்து, மயிலை கபாலீசுவரர் கோவில் தல ஓதுவார் பா.சற்குருநாதனிடம் கேட்டபோது, பல சுவாரசியமான தகவல்களை நமக்குத் தந்தார்.

தமிழகத்தின் எல்லா சிவாலயங்களிலுமே அறுபத்துமூவர் திருமேனிகள் எழுந்தருளி வீதியுலா வருவது என்பது தொன்று தொட்டு நடந்து வருகிறது. ஆனால் இன்றைக்கும் அறுபத்து மூவர் விழா என்றாலே, மயிலாப்பூர் தான் அனைவருக்கும் ஞாபகம் வருகிறது. அதன் பின்னணி என்ன? காரணம் என்ன?

தமிழகத்தில் சைவத்தை மீண்டும் நிலைநாட்டிய ஆச்சார்யர்களில், திருஞானசம்பந்தருக்கு தனியிடம் உண்டு. கி.பி.,7ம் நுாற்றாண்டின் துவக்கத்தில் வாழ்ந்த அவர், தமிழகத்தின் தலங்கள் தோறும் சென்று பாடி, மக்கள் மத்தியில் சைவ சமயத்தைப் பரப்பினார்.

அக்காலத்தில், அவரது புகழ் தமிழகம் முழுமையும் பரவியிருந்த காரணத்தால், பலர் அவர் மீது அளப்பரிய அன்பும், பக்தியும் கொண்டிருந்தனர். அப்படிப்பட்ட அன்பர்களில் ஒருவர் தான், மயிலாப்பூரில் அப்போது வாழ்ந்து வந்த சிவநேசச் செட்டியார் என்பவர்.

இவருக்கு பூம்பாவை என்று ஒரு மகள் இருந்தாள். இவள் சிறுவயதாக இருக்கும் போதே, திருஞான சம்பந்தருக்குத் தான் இவளை மணமுடிக்க வேண்டும் என உறுதிபூண்டார் செட்டியார். அவளும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தாள்.

ஒருநாள், தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, பாம்பு தீண்டி இறந்து போனாள். ஒரே மகளை இழந்த சோகத்தைவிட, சம்பந்தருக்கு அவளை மணம் முடிக்க இயலாமல் போனதே என செட்டியார் வேதனையில் ஆழ்ந்தார்.

எனினும், பூம்பாவை தகனம் செய்யப்பட்ட பின், அவளது எலும்புகளை ஒரு குடத்தில் போட்டு பாதுகாப்பாக வைத்திருந்தார்.

இந்த நேரத்தில், சம்பந்தர் திருவொற்றியூருக்கு வந்தார். அவரது வருகையைக் கேள்விப்பட்ட செட்டியார், அவர் மயிலைக்கு வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டுகோளை ஏற்ற சம்பந்தர், திருவொற்றியூரில் இருந்து மயிலைக்கு வருகிறார்.

வரும் வழி முழுவதும், செட்டியார் பந்தல் போட்டிருந்ததாக, பெரியபுராணத்தில் சேக்கிழார் குறிப்பிடுகிறார்.

மயிலை வந்த சம்பந்தரிடம், தனது மகளை அவருக்காக என நிச்சயித்து வளர்த்ததையும், அவள் பாம்பு தீண்டி இறந்து போனதையும், செட்டியார் வருத்தத்துடன் கூறினார். அதைக் கேட்ட சம்பந்தர், பூம்பாவையின் எலும்புகள் வைக்கப்பட்ட குடத்தைக் கொண்டு வரும்படி செட்டியாரிடம் கேட்டுக் கொண்டார்.

கோவிலின் வெளிப்புறத்தில் கொண்டு வந்து வைக்கப்பட்ட அந்த குடத்தின் முன் நின்று சம்பந்தர், "மட்டிட்ட புன்னையங் கானல்' என்ற பதிகத்தைப் பாடுகிறார்.

மொத்தம் 11 பாடல்கள் உள்ள இந்தப் பதிகத்தில் ஒவ்வொரு பாடலிலும், மயிலையில் ஓராண்டில் ஒவ்வொரு மாதத்திலும் நடக்கும் விழாக்களை சம்பந்தர் குறிப்பிட்டு, அந்த விழாக்களைப் பார்க்காமல் போய்விட்டாயே என பாடுகிறார்.

பத்தாவது பாடல் முடியும்போது, குடத்தில் இருந்து பூம்பாவை முழுமையாக உருப்பெற்று, உயிருடன் எழுந்து வருகிறாள்.

பெருமகிழ்ச்சி அடைந்த செட்டியார், அவளை மணந்து கொள்ளும்படி சம்பந்தரை வேண்ட, அவரோ தாம் அவளுக்கு மீண்டும் உயிர் தந்ததால் தந்தை முறையாவேன் எனக் கூறி மறுக்கிறார். அப்போது சம்பந்தருக்கு 16 வயது என்கிறது பெரியபுராணம்.

இந்த அற்புத செயலை நினைவு கூர்வதற்காகத் தான் இந்தப் பங்குனிப் பெருவிழா இப்போது நடக்கிறது.

சம்பந்தரின் இந்த அற்புதச் செயல், எட்டாம் நாள் அன்று காலையில், குளக்கரையில் நடக்கும். அதன் தொடர்ச்சியாகவே அன்று மாலை அறுபத்துமூவர் திருவிழா நடக்கும்.

மற்ற தலங்களில், ஆண்டுதோறும் நடக்கும் விழாக்களில், வழக்கமாகவே அறுபத்து மூவர் எழுந்தருளல் உண்டு.

ஆனால் மயிலையில் மட்டும் சம்பந்தரின் அற்புதச் செயலோடு இணைத்து இந்த விழா நடப்பதால் இவ்வளவு பிரபலமாகியிருக்கிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate