ஞாயிறு, 26 ஜூன், 2011

உழவாரப் பணி - கேள்வியும் பதிலும் -1

கோயில் என்றால் என்ன? 


தமிழில் "கோ' என்றால் இறைவன் என்று பொருள்;"இல்' என்றால் வீடு.இறைவன் எழுந்தருளியுள்ள இடம் தான் கோயில். 



கோயிலின் நோக்கம் எது? 


கோயில் என்ற கட்டட அமைப்பு உலகின் அனைத்து நாடுகளிலும் ஏதாவது ஒரு வடிவில் இருக்கிறது. ஒவ்வொரு மதமும் தனது கோயிலுக்கு என்று ஒரு வடிவமைப்பை நிர்ணயித்துள்ளது. அந்த வடிவமைப்பு, அந்த மதத்தின் கொள்கைகளுக்கு ஏற்றாற்போல இருக்கும்.


இந்து மதத்திலும் கோயில்கள், ஒரு குறிப்பிட்ட லட்சியத்தை மனிதன் அடைய வேண்டும் என்பதை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.

கோயிலை வடிவமைத்தோர் யார்? 


"துன்பம் இல்லாத இன்பத்தை அடைய வேண்டும்' என்பதுதான் அந்த லட்சியம். ஆரம்ப காலங்களில் உண்பது, உறங்குவது, புணர்வதில் இன்பம் கண்ட மனிதன், பின்னர் அதையும் கடந்து ஓர் ஒப்பற்ற இன்பம் இருப்பதைத் தன் உள் உணர்வினால் அறிந்தான்.


அந்த இன்பம்தான், ஒட்டு மொத்த மனித சமூகத்தின் துன்பங்களை, அவலங்களை, பிரச்னைகளை நீக்குவதற்கு சரியான தீர்வு என்பதைக் கண்டான். அந்த இன்பத்தை அடையும் வழியைப் பிறருக்கு அறிவித்தான்.
அவ்வாறு "நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்று பிறருக்கு அறிவித்த மாமனிதர்களையே நாம் ரிஷி, முனிவர், மகான், சான்றோர், அருளாளர் என்று எல்லாம் போற்றுகிறோம்.


இவர்கள், தாம் அடைந்த இன்பத்தை, சாதாரண மக்கள், மிகுந்த சிரமப்பட்டு அடையாமல், ஓரளவேனும் எளிதில் பெற வேண்டும் என்ற கருணை உள்ளத்தோடு நமக்காக வடிவமைத்துத் தந்ததுதான் கோயில்.

கோயிலின் அமைப்புக்கு அர்த்தம் உண்டா? 


ஆம். அர்த்தம் உண்டு. உதாரணத்திற்கு, கருவறை என்பது நமது மனம். நமது மனத்தில் உள்ள அழுக்குகள் தான், கருவறையில் உள்ள இருள். அந்த அழுக்குகளைப் போக்க அறிவு என்ற விளக்கை ஏற்றினால், மனத்துள் வசிக்கும் இறைவனை நாம் காணலாம்.


மனம், குகை போல் இருளாய் இருக்கும். அந்தக் குகைக்குள் வசிப்பதால் முருகப் பெருமானுக்கு "குகன்' என்று அழகிய பெயர் ஏற்பட்டது.
இதுபோன்று, கோயிலின் ஒவ்வொரு பகுதிக்கும் நம் பகுத்தறிவுக்கேற்ற பல்வேறு விளக்கங்களை நம் முன்னோர் அளித்துள்ளனர்.


நாம் தான் அவற்றைத் தெரிந்து உணர்ந்து கொள்ளாமல்,"கோயில்கள் எதற்கு?' என்று வீண் கர்வத்தால் கேள்விகள் கேட்டுக் கொண்டு திரிகிறோம்.


ஆனால் நம் நாட்டுக் கோயில்களின்  வடிவமைப்பு மற்றும் அவற்றின் சமூகப் பொருளாதார முக்கியத்துவத்தை உணர்ந்த வெளிநாட்டு அறிஞர்கள், அவற்றைப் பற்றிப் பல்வேறு விதங்களில் ஆராய்ச்சிகளை இன்றும் மேற்கொண்டு வருகின்றனர்.


கோயில்களைப் பற்றிப் படிப்பதற்கு என்றே, அவர்கள் தம் நாட்டுப் பல்கலைக்கழகங்களில் தனித் துறைகளை ஏற்படுத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate